ஈகுவடார் நாட்டில் நயேலி டாபியா, யூலியானா மசியாஸ், டெனிஸ் ரெய்னா என்ற 3 இளம்பெண்கள் கடந்த 4ஆம் தேதி தனது நண்பர்களை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளனர். அதன் பின் அவர்கள் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பதறிப்போன பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பெண்கள் காணாமல்போனது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், சான்டோ டோமிகோ பகுதியில் இருந்து சுமார் 84 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நதியின் கரையில் 3 பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, அங்கு சென்று போலீசார் பார்த்தபோது, அது காணாமல் போன 3 பெண்களின் உடல்கள் என்பதை உறுதி செய்தனர். உயிரிழந்த 3 பெண்களும் குளியல் ஆடைகளை அணிந்தபடி கழுத்து அறுக்கப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், உயிரிழந்த 3 பெண்களும் அவர்களுடைய உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளனர். அதில் “ஏதோ நடக்கப் போகிறது என்று நான் உணர்கிறேன். அதற்காக உன்னிடம் தெரியப்படுத்துகிறேன்” என்று மெசேஜ் அனுப்பி உள்ளார். இந்த மெசேஜை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.