கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த வீரமணி-செல்வி தம்பதிக்கு 18 வயதில் ஒரு மகள் உள்ளார். கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வரும் செல்விக்கு அங்குள்ள நண்பர் ஒருவர் மூலமாக பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ மதிவாணன் வீட்டில் வேலைக்கு ஆட்கள் தேவை என தெரியவந்துள்ளது. இதையடுத்து, தனது 18 வயது மகளை அவரது தாய் எம்எல்ஏ மகன் வீட்டில் கடந்தாண்டு பணிக்குச் சேர்த்துள்ளார். அங்கு பணிக்குச் சேர்ந்த பின்னர் எம்எல்ஏ மகன் பேசிய சம்பளத்தைக் கொடுக்காமல் மிகவும் குறைத்து கொடுத்தாக கூறப்படுகிறது.
மேலும், சம்பளம் கொடுக்காமல் அளவுக்கு அதிகமாக வேலை வாங்கியதால் சுதாகரித்துக் கொண்ட அப்பெண், தனக்கு வேலை பிடிக்கவில்லை, வீட்டுக்குச் செல்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து, ஆன்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகிய இருவரும் அவரின் செல்போனை பறித்துவிட்டு, இளம்பெண்ணை இரவு பகல் பார்க்காமல் வேலை வாங்கியதுடன் அவரது கை, கன்னம், முதுகு ஆகிய பகுதியில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
பின்னர், பொங்கல் தினத்தன்று அந்த பெண்ணை அவரது சொந்த ஊரில் விட்டு விட்டு வந்துள்ளனர். அப்போது பெண்ணின் உடலில் சூடு வைத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அம்மாவட்ட போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளதால், இச்சம்பவம் குறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட இளம்பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, பல்வேறு கட்சி பிரமுகர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக எம்எல்ஏ மகன் ஆன்ட்ரோ மற்றும் அவரது மனைவி மெர்லினா மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், தாக்குதல், மிரட்டல், குழந்தை பாதுகாப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.