கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டு, நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேறொருவருடன் நிச்சயதார்த்தம் செய்யவிருந்த பெண்ணுடன் அவரது மகன் ஓடிப்போனதால், அவரது தாய் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இளம்பெண் தன் காதலனுடன் ஓடிப்போனதை அறிந்த அவரது குடும்பத்தினர், புது வந்தமுரி கிராமத்தில் உள்ள அந்த பையனின் வீட்டை தேடிச் சென்று தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் இளைஞரின் தாயை நிர்வாணமாக இழுத்துச் சென்று, மின்கம்பத்தில் கட்டி வைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்தத் தாயை விடுவித்து, இந்தக் கொடுமையில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தக் கிராமத்தில் வேறு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெலகாவி போலீஸ் கமிஷனர் சித்தராமப்பா கூறுகையில், ”ஒரே சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து வந்துள்ளனர். திங்கள்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் அவர்கள் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இளைஞரின் வீட்டிற்குள் புகுந்து அவரது தாயை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியுள்ளனர்” என்று தெரிவித்தார்.