தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் குவைத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAFF) சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, நேற்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ காண்டீரவா ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் குவைத் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இதில் அரையிறுதியில் வங்கதேச அணியை 1-0 என வீழ்த்தி முதல் அணியாக குவைத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதேபோல் இந்தியா, தனது அரையிறுதிப் போட்டியில் லெபனான் அணியை 4-2 என வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதுவரை 8 முறை தெற்காசிய கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியும், எந்த விதத்திலும் குறைவில்லாத குவைத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கி 15-வது நிமிடத்தில் குவைத் அணியின் ஷபீப் அல் கல்டி ஒரு கோல் அடித்தார்.
இந்தியா தனக்கு கிடைத்த கார்னர் வாய்ப்புகளையெல்லாம் கோல் அடிக்க முயன்றாலும், குவைத் வீரர்களின் தடுப்பினால் இந்திய அணிக்கு கோல் வாய்ப்பு தள்ளிபோய்க்கொண்டே இருந்தது. ஆட்டத்தின் முதல் பாதி முடியும் முன்னர் 39-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு லல்லின்ஸுலா சங்டே முதல் கோலை எடுத்தார். அதன்பிறகு இரு அணிகளும் 90 நிமிடங்கள் தாண்டியும் கூடுதலான 5 நிமிடத்தில் வரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் கூடுதலாக வழங்கப்பட்ட 15 நிமிடத்திலும் இரு அணிகளின் கோல் அடிக்கும் முயற்சி பலனளிக்கவில்லை. இதனையடுத்து மேலேயும் கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதிலும் இரு அணிகளின் முயற்சி கைக்கூடவில்லை. அடுத்ததாக, பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் குவைத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி 9-வது முறையாக தெற்காசிய சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளது.