மக்கள் தொகை மற்றும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு சலுகைகளை தென்கொரிய அரசு அறிவித்துள்ளது.
ஆசியாவில் மிகக்குறைவான மக்கள் தொகை கொண்ட நாடாக தென்கொரியா உள்ளது. அதாவது, கடந்த 2022-ம் ஆண்டில், அந்த நாட்டில் ஒரு பெண்ணின் சராசரி குழந்தை எண்ணிக்கையானது, 0.78 ஆக இருந்தது. இது, அதற்கு முந்தைய 2021-ம் ஆண்டின் விகிதமான 0.81 என்பதைவிட குறைவாகும். பிறப்பு விகிதம் குறைந்து வருவதே இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. எனவே, குழந்தைப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, தென் கொரிய அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் குழந்தைபெறும் தாய்மார்களுக்கு சலுகைகள், மருத்துவ வசதிகளை அரசு வழங்கி வருகிறது. அதனடிப்படையில், 2022 ஆம் ஆண்டு முதல் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்க்கு இந்திய ரூபாய் மதிப்பில், ₹1.2 லட்சத்தை வழங்குகிறது. அது தவிர பல விதமான சலுகைகளை வழங்கிவரும் தென்கொரிய அரசு, தற்போது, ஒரு வயது வரையிலான குழந்தைகளுக்கு மாதம் ரூ. 62 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்ற புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மேலும், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதத்திற்கு ரூ. 31 ஆயிரமும் (500,000 வோன்) நிதி உதவியாக, வரும் 2024-ம் ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது. இது 2022-ம் ஆண்டில் முறையே ரூ. 43 ஆயிரம் மற்றும் ரூ. 21 ஆயிரம் என்று இருந்தது. ஆரம்பப்பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 12 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், கர்ப்பிணிகளுக்கான மருத்துவச் செலவினங்கள், குழந்தையின்மை சிகிச்சைக்கான செலவுகள், குழந்தை காப்பகச் சேவைகள் உள்ளிட்டவற்றையும் தென் கொரிய அரசே வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர குழந்தைகளை பாதுகாப்பாக பெற்றுக் கொள்வதற்கான அனைத்தை ஏற்பாடுகளும் அரசால் மேற்கொள்ளப்படும். ஆரம்ப நிலையில் குழந்தைகளின் கல்வியிலும் அரசு அதிக முதலீடு செய்யும். அதே நேரத்தில் குழந்தையின் 7 வயது வரை ரூ.31 லட்சம் செலவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.