தென்மேற்கு பருவமழை கடந்த 3 மாதங்களில் இயல்பை விட அதிகம் பெய்துள்ள நிலையில், காவரி கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இயல்பைவிட 87 விழுக்காடு கூடுதல் மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காவிரி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவிரி ஆற்றுப்படுகை அமைந்துள்ள அனைத்து மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஈரோடு, நாமக்கல், திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புப் படை குழுவினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மழை வெள்ள பாதிப்பு புகார்களை 1070, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.