கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாட்டில் வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை என இரண்டு பருவமழை காலங்கள் இருந்தாலும் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் இந்தியாவில் அதிக மழை பொழிவு இருக்கும். தென்மேற்கு பருவமழையின் காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை. இது விவசாயத்திற்கு உகந்தது என்பதால் நாட்டில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் சாகுபடி பணிகளில் ஈடுபடுவார்கள்.
இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்புக்கும் குறைவாக இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. பைபோர்ஜாய் புயல் காரணமாக மழை பொழிவு குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தனர். ஆனால், இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவுக்கு பெய்யும் என்று தெரிவித்துள்ளது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை அந்தமான் பகுதியில் மே 20ஆம் தேதி வழக்கம் போல தொடங்கிவிட்டது. மழையானது படிப்படியாக நகர்ந்து காற்றின் திசை வேகத்தின்படி கேரளாவில் வழக்கம் போல ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை காலதாமதம் ஆகியுள்ளது.
இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அரபிக்கடலில் பைபோர்ஜாய் புயல் உருவானது. இந்த புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை உருவாகுவதற்கான பகுதிகளில் உள்ள காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்படும் என்பதால் தென்மேற்கு பருவமழை தொடங்குவது தள்ளிப்போகும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர். அதற்கேற்ப கடந்த வாரம் முழுவதும் தென்மேற்கு பருவமழைக்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.
தற்போது பைபோர்ஜாய் புயல் கராச்சிக்கு தெற்கே, ஓமன் நோக்கி நகர்ந்து விட்டது. இதன்காரணமாக லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்பட தொடங்கின. இதன்மூலம் அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே தற்போது மாலத்தீவு-லட்சத்தீவு முதல் கேரளா கடற்கரை வரை நிலையான மேகமூட்டம் ஏற்பட்டது. இது தென்மேற்கு பருவமழை ஆரம்பம் ஆகி விட்டதற்கான அறிகுறியாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
ஆலப்புழா, கொல்லம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய தொடங்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா, தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் தமிழ்நாட்டிலும் வெப்பத்தின் தாக்கம் குறையும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை விரைவில் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கலாம்.