அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இந்நிலையில், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சூழல் நிலவுவதாகவும், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.