மின் இணைப்புடன் ஆதாரை எண்ணை இணைக்க அனைத்து மின் அலுவலகங்களிலும் வரும் 28ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்
ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு கடந்த 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அனைத்து பிரிவு மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் நாளை(நவம்பர் 28) முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். இந்த சிறப்பு முகாம்கள் பண்டிகை தினங்களைத் தவிர, ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும் என கூறினார். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் மின்சாரத்தில், எந்த மாற்றமும் இருக்காது எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.