நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. இன்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நாளை முதல் புதிய கட்டிடத்திலும் கூட்டத் தொடர் நடைபெறும். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு வருகை தந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடியதாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் அமையும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டும். 2047ஆம் ஆண்டு இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவோம் என்பதுதான் இலக்கு. இதற்கான நடவடிக்கைகளை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மேற்கொள்வோம். புதிய நாடாளுமன்றத்தில் புதிய உறுதிமொழிகள் எடுக்கப்படும். நாட்டின் முன்னேற்றத்துக்கு எந்த தடைக்கல்லும் இருக்கக் கூடாது” என்றார்.