புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை எப்போது என்றும் அதன் சிறப்புகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
வருடத்தில் 12 அம்மாவாசை வந்தாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. வருடம் முழுவதும் வரும் அமாவாசை விரதங்களை மேற்கொள்ள முடியாதவர்கள் இந்த 3 மாதங்களில் வரும் அமாவாசையை கடைபிடித்து வந்தாலே அதன் முழு பலனையும் உங்களால் பெற முடியும்.
மஹாளய அமாவாசை 2024 இல் எப்போது..?
இந்தாண்டு அக்டோபர் 2ஆம் தேதி புதன்கிழமை மஹாளய அமாவாசை வழிபடப்படுகின்றது. அன்றைய தினம் முன்னோர்களை வரவேற்கும் விதமாக தர்ப்பணம் கொடுப்பது சிறப்பாகும். இதில் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தது எள்ளும் தண்ணீரும் இறைப்பதாகும்.
அன்றைய தினம் காலை 6 மணியில் இருந்து 1 மணி வரை தர்ப்பணம் கொடுத்துக் கொள்ளலாம். ராகு காலம் மற்றும் எமகண்ட நேரத்தை தவிர்த்துக் கொள்ளவும். புனித நதிக்கரைகள் மற்றும் நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பாக கூறப்படுகிறது.
யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்கலாம்..?
தாய் அல்லது தந்தையை இழந்த ஆண்கள், கணவனை இழந்த பெண்களும் தர்ப்பணம் கொடுக்கலாம். சுமங்கலி பெண்கள் விரதம் இருக்கவோ, தர்ப்பணம் கொடுக்கவோ கூடாது. அன்று வீட்டு வாசலில் கோலம் போட கூடாது. பித்ருலோகத்தில் இருந்து வரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்கள் பசியை போக்குவதோடு, பசியோடு இருக்கும் ஏழை-எளியோருக்கு உணவு கொடுப்பதன் மூலம் நம்முடைய பல தலைமுறைகளுக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. மேலும் தண்ணீர் தானம், பசுவுக்கு அகத்திக்கீரை வழங்குவது போன்ற தானங்களை செய்வதும் சிறப்பாகும். மாலை நேரத்தில் கோவிலுக்கு சென்று இரண்டு நெய் தீபம் ஏற்றி உங்கள் வழிபாட்டை முடித்துக் கொள்ளலாம்.
பலன்கள்…
எடுத்த காரியம் வெற்றி அடையும். தடைகள் அகன்று வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். நம்முடைய மூதாதையர்களின் அருள் ஆசி நம்மை காக்கும் கவசமாகும். அவர்களின் ஆசீர்வாதம் இருந்தாலே எத்தகைய தடைகளையும் தாண்டி வெற்றி பெறலாம். நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களையே பித்ருக்கள் என்கிறோம். அவர்களின் ஆத்மா சாந்தி அடையாமல் இருப்பதை பித்ரு தோஷம் என்கிறோம். பித்ருக்களின் சாபம் என்பது கடவுள் நமக்கு அளிக்கும் வரங்களை கூட தடுத்து நிறுத்தும் சக்தி உடையது.
குழந்தை பிறப்பு தள்ளிச் செல்வது, தீராத நோய், திருமணத்தடை, காரியத்தடை போன்றவற்றிற்கு பித்ரு தோஷமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. எனவே, வரவிருக்கும் இந்த மஹாளய அமாவாசையை தவறவிடாமல் நம் முன்னோர்களை வரவேற்று தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் நமக்கு மட்டுமின்றி, நம் தலைமுறையினருக்கும் அவர்களின் ஆசி கிடைக்கும்.
Read More : ஓய்வு பெறும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு..!!