ஆசிய கோப்பை தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் விக்கெட் கீப்பர் குசல் பெரேரா ஆகியோருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை 2023 தொடர் தொடங்க உள்ள நிலையில் கோவிட் 19 அச்சுறுத்தல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து ஆசிய கோப்பை தொடரை நடத்துகின்றன. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த ஆசிய கோப்பை தொடர் உலகக் கோப்பை தொடருக்கான ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், போட்டி தொடங்குவதற்கு 4 நாட்களே உள்ள நிலையில் இலங்கை வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காயம் மற்றும் கோவிட் -19 காரணமாக நான்கு கிரிக்கெட் வீரர்கள் போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக இருப்பதால் நடப்பு சாம்பியனான இலங்கை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் துஷாமந்த சமீரா போட்டியிலிருந்து விலக வாய்ப்புள்ளது. மேலும், எல்.பி.எல் இறுதிப் போட்டிக்கு முன்னதாக தொடையில் காயம் ஏற்பட்ட லெக் ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா, குறைந்தது இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை அணி தனது ஆசியக் கோப்பை தொடரை எதிர்வரும் 31ஆம் தேதி பல்லேகெலேவில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது. செப்டம்பர் 5-ம் தேதி லாகூரின் கடாஃபி ஸ்டேடியத்தில் தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது குறிப்பிடத்தக்கது.