பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை விரைந்து அமல்படுத்துவது தொடர்பாக மத்திய நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். பாரம்பரிய கைவினை மற்றும் திறன்களில் ஈடுபட்டுள்ள தனிநபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்காகவும், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் தடையற்ற பதிவு, விரைவான சரிபார்ப்பு ஆகியவற்றை உறுதி செய்யுமாறு மாநில அரசு களப்பணியாளர்களை மத்திய நிதிச்சேவைகள் துறைச் செயலாளர் வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தின் போது, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் பிராந்திய இயக்குநரகம் மற்றும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி உள்ளிட்டவை விரிவான செயல்திட்ட விளக்கக்காட்சிகளை வழங்கின. பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் முன்னேற்றம் குறித்த விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
பாரம்பரிய கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதையும், அவர்களின் தயாரிப்புகளை உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு கொண்டு செல்வதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 18 வகையான கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் பயனடைவார்கள்.
பயனாளிகளுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, பயிற்சியின் போது, தினமும், 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், கருவிகள் வாங்க 15,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். பயனாளிகள் ரூ.3 லட்சம் வரை பிணையில்லாக் கடன் பெற தகுதியுடையவர்கள்.