நம் அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய சிறு சிறு விஷயங்கள் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஆனால், பொழுதுபோக்காக எண்ணக்கூடிய தாவரங்களை வளர்ப்பதால், மன ஆரோக்கியத்தை மேம்படும் என சொன்னால் நம்ப முடிகிறதா..? தோட்டக்கலை என்பது ஒரு நிதானமான பொழுது போக்கைக் குறிப்பதாகும். இது உடல் மற்றும் மனதிற்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
பூக்கள், காய்கறிகளை வளர்ப்பதாக இருந்தாலும், இயற்கையில் நேரத்தை செலவிடுவதாக இருந்தாலும் அது நம் வாழ்வை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது. உண்மையில், பசுமையான தாவரங்கள் மற்றும் இடங்களுடன் நாம் ஒன்றிணைந்து இருப்பது பல வழிகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகளில் கூட தெரிவிக்கின்றன.
தேசிய சுகாதார நிறுவனங்கள் நடத்திய ஆய்வில், பசுமையான இடங்களுக்குச் செல்வது மற்றும் தோட்டக்கலை தொடர்பான வேலைகளை செய்வது மன அழுத்தத்தை குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவுவதாக சொல்லப்படுகிறது. மேலும், தாவரங்களுடன் நேரத்தைச் செலவிடும்போது, பதட்டத்தை குறைத்து, அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
ஜிம்மிற்குச் செல்லாமல் உடற்பயிற்சி பெற தோட்டக்கலை ஒரு சிறந்த வழியாகும். ஏனென்றால், தோட்டக்கலையின் போது நாம் செய்யக்கூடிய மண் தோண்டுதல், களையெடுத்தல் உள்ளிட்ட பணிகள் பல்வேறு தசைக் குழுக்களை ஈடுபடுத்துகின்றன. இது வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது. கூடுதலாக, தோட்டக்கலையின் மூலமும் உடற்பயிற்சியைப் போலவே பல கலோரிகளை எரிக்க முடியும்.
குறிப்பாக, வயதானவர்களுக்கு அல்லது உடல் குறைபாடுகள் இருப்பவர்களுக்கு தோட்டக்கலை பொருத்தமாக இருக்கும். ஒரு தோட்டத்தில் வேலை செய்வது என்பது தனிமை உணர்வுகளைக் குறைக்க உதவும். குறிப்பாக, மனநல பிரச்சனைகள், குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். தோட்ட அமைப்புகளைத் திட்டமிடுதல், பராமரிப்பு போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதன் மூலம் மனத்தூண்டுதல் போன்றவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி உங்களை சுறுசுறுப்பாக வைக்கவும் உதவும்.
தோட்டக்கலையில் உடல் உழைப்பானது, இயற்கையான சூரிய ஒளி நமக்கு கிடைப்பதால், தூக்கத்தின் தரம் மேம்படுத்துகிறது. இரவில் நல்ல மற்றும் நிம்மதியான தூக்கம் இருக்கும். இது தூக்கமின்மையால் போராடுபவர்களுக்கு இயற்கையான தீர்வாக அமைகிறது. களையெடுத்தல், நடவு செய்தல் அல்லது இயற்கையைக் கவனிப்பது போன்ற செயல்கள் நமது மனநிலையை மேம்படுத்தி சுறுசுறுப்பாக இருக்க வைக்கும். எனவே, வீட்டில் காலியிடங்கள் இருந்தால், அதில் காய்கறி உள்ளிட்ட உங்களுக்கு பிடித்தமான செடிகளை வளர்க்கலாம். மேலும், நகரங்களில் வசிப்பவர்கள் இட வசதிக்கு ஏற்ப மாடித்தோட்டம் அமைத்து இயற்கையுடன் ஒன்றிணைந்து ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.