சென்னையில் வெள்ளம் வடிந்த போதிலும் எலி காய்ச்சல், தோல் நோய்கள், சுவாச நோய்கள் ஆகியவை பரவக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மிக்ஜாம் புயல் ஆடிய கோரத்தாண்டவத்தின் வடுக்கள் இன்னும் வட தமிழகத்தை விட்டு அகலவில்லை. குறிப்பாக, சென்னை மிக மோசமான பாதிப்பை சந்தித்திருக்கிறது. பல இடங்களை மழை வெள்ளம் மூழ்கடித்துச் சென்றது. இருந்தபோதிலும், அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் அடுத்த சில தினங்களிலேயே மழை வெள்ளம் வடிந்தது. ஆனாலும் சில இடங்களில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. இதன் காரணமாக அந்த வெள்ள நீர் அனைத்தும் சாக்கடையாக மாறி பெரும் துர்நாற்றத்துடன் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் மேற்கொள்ளப்படும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஜே. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். சென்னையில் தற்போது மாநகராட்சியின் பணி என்பது மீட்புப் பணியை தாண்டி நிவாரணப் பணிக்கு சென்றுவிட்டது. எங்கெல்லாம் மழை நீர் வடிந்துவிட்டதோ அங்கெல்லாம் பணி முடிந்துவிட்டது என்று திரும்ப வராமல், அங்கு பொது சுகாதார நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். குப்பைகளை அகற்றுவது, கழிவுகளை அகற்றுவது என தெரு தெருவாக நாங்கள் இறங்கி வேலை செய்து வருகிறோம்.
இப்போது சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும், சுரங்கப்பாதைகளும் செயல்பாட்டு வந்துவிட்டது. அதே நேரத்தில், பல இடங்களில் காலி மனைகளில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. சாக்கடை நீரும் வருகிறது. இப்படி தண்ணீர் தேங்குவதால் எல்லோரும் இப்போது டெங்கு காய்ச்சல் மட்டும் தான் வரும் என்று நினைக்கிறார்கள். அப்படி கிடையாது. தோல் நோய்கள், பூஞ்சை நோய்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள், தண்ணீரால் ஏற்படக்கூடிய நோய்கள் பரவக்கூடும். மேலும், தேங்கிய தண்ணீரில் இறங்கி நடந்தால் எலி காய்ச்சலும் வரும்.
அதனால் மாநகராட்சி சார்பில் இதற்கான தடுப்பு மாத்திரைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கும் மருந்து கொடுக்குறோம். எல்லா இடங்களிலும் இந்த மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.