வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அனைத்து தலைவர்களின் சிலைகளையும் அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் பேருந்து நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலையை அகற்றக்கோரி திமுகவை சேர்ந்த வி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கும் வகையில் அதிமுகவை சேர்ந்த வி.யு.மருதாச்சலம் என்பவர் சிலையை அமைத்து இருப்பதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மருதாசலம் தரப்பில் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், பேருந்து நிலையத்தின் இடத்தில் சிலை அமைக்கப்படவில்லை. வண்டி பாதை புறம்போக்கு இடத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மட்டுமின்றி பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் சிலைகளும் அங்கே உள்ளதாக தெரிவித்தார்.
தமிழக அரசு தரப்பில், பேருந்து நிலையம் அருகில் உள்ள சிலைகளை அகற்றும்படி காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே வண்டி புறம்போக்கு இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளில் குறிப்பிட்டவற்றை மட்டும் அகற்றாமல், அனைத்து சிலைகளையும் அகற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
Read More : Dogs | ”கடிச்சா உயிரே போயிரும்”..!! பிட்புல் போன்ற கொடூரமான நாய் இனங்களுக்கு மத்திய அரசு தடை..!!