கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக தற்போதைய திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, தற்போது காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். விரைவில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக அரசு மீது திமுக கடும் விமர்சனத்தை வைத்து வருகிறது.
இந்நிலையில், திமுகவுக்கு எதிராக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”கடந்த ஆட்சியில் நடந்த போக்குவரத்துத்துறை ஊழலுக்கு தான் இப்போ செந்தில் பாலாஜிக்கு இந்த நிலை. இந்த ஆட்சியில் நடக்கும் டாஸ்மாக் ஊழலை விசாரிக்க துவங்கினால் செந்திலுடன் சேர்த்து மொத்த ஸ்டாலின் குடும்பத்திற்கும் இதே நிலை தான் வரும்..! அடக்கி வாசியுங்கள், அந்த நாள் வெகுதொலைவில் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.