ஒசூரில் செயல்பட்டு வரும் ஏகே ஸ்டாக் நிறுவனத்தில் பிட்காயின் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து அந்நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஒசூரின் பிரதான பகுதியில் ஏ.கே.ஸ்டாக் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. அருண்குமார் என்பவர் இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இதில் பிட்காயினில் முதலீடு செய்வதால் விரைவில் பணம் இரட்டிப்பாக்கிக் கொடுக்கப்படும் எனக்கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
போச்சம்பள்ளியைச் சேர்ந்த சுதாகர் மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாந்தவர்கள் அளித்த புகாரில் இந்நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3 மணி நேரமாக சோதனை நடத்தினர். நாமக்கல் டி.எஸ்.பி.தலைமையிலான பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.
பிட்காயின் மோசடி குறித்து பணியாற்றும் ஊழியர்கள், உரிமையாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததுடன் அப்பகுதி மக்களுக்கு இது போன்ற நிறுவனங்களில் யாரும் முதலீடு செய்ய வேண்டாம் என கூறி அறிவுறுத்தினர்.