தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆனால், அக்டோபர் மாதத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பருவமழை கிடைக்கவில்லை. பருவமழை அளவு பற்றாக்குறையாகவே இருந்தது. தற்போது நவம்பர் மாதத்தில் ஓரளவுக்கு நல்ல மழை பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
இதற்கிடையே, வங்கக்கடலில் அந்தமான் அருகே நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மாயம் தெரிவித்துள்ளது.
நாளையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கூறியிருந்த நிலையில் வலுவடைவது தாமதம் ஆகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் தமிழ்நாட்டை நோக்கி நகரும்?
வங்கக்கடலில் உருவாகும் புயல் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். காற்றழுத்த தாழ்வுப்பகுதி மெதுவாக நகரக்கூடும் என்பதால் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புயலாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.