காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக கிறிஸ்துமஸ் தினமான 25ஆம் தேதியன்று தென் தமிழக மாவட்டங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை என 8 மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டிசம்பர் 26ஆம் தேதியை பொறுத்த அளவில், தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி என 11 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனிடையே நாகைக்கு கிழக்கே 480 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.