வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டது. தற்போது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, விசாகபட்டினத்தில் இருந்து 380 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
மேலும், வலுபெற்று நவம்பர் 18ஆம் தேதி காலை வங்கதேசத்தின் மோங்லா -கேபுபரா இடையே சுமார் 55 கி.மீ. வேகத்தில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி வரை பரவலாக மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.