பிரபல பின்னணி பாடகி கல்பனா, துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், தற்போது உயிருக்கு ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக கல்பனா பணியாற்றி வருகிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று, ரசிகர்கள் மத்தியில் இவர் பிரபலமானார். தெலுங்கானாவின் ஹைதராபாத் அருகே நிசாம்பத் நகரில் கல்பனா வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அவரது வீடு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, கல்பனா மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் கல்பனாவை பரிசோதித்ததில், அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டது தெரியவந்தது. மேலும், நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் வெண்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, அந்த வெண்டிலேட்டரை ம்ருத்துவர்கள் எடுத்துள்ளார்கள். அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், கல்பனாவின் மகள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “என் அம்மா தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. அவர் எல்எல்பி படித்தவர். பிஎச்டி முடித்தவர். மன அழுத்தத்திற்காக தூக்க மாத்திரை அதிகமான அளவில் பயன்படுத்தியுள்ளார். இதனால், இந்த விபரீதம் நடந்துள்ளது. மருத்துவர்கள் பரிந்துரை செய்த மாத்திரையை தான் தன்னுடைய அம்மா சாப்பிட்டுள்ளார். அது சற்று அதிகமாகிவிட்டது. மற்றபடி, இதை தவறாக யாரும் சித்தரிக்க வேண்டாம். சில நாட்களில் வீடு திரும்புவார். எங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.