பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்; கஞ்சா, குட்கா மற்றும் புகையிலைப் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகளின் மீது சென்னை மாநகர முனிசிபல் சட்டம் 1919, பிரிவு 379A(1)ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கடந்த 2021 ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் முதல் 14ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோ கிராம் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறையின் மூலம் விற்பனை செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பெருநகர காவல் ஆணையாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், 126 கடைகள் மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. வணிக கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, கஞ்சா மற்றும் புகையிலைப்பொருட்களை எக்காரணம் கொண்டும் சேமித்து வைக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது. மீறினால் காவல் துறையுடன் இணைந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.