சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைதாகினார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கனவே 2 முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 3-வது முறையாக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு வெள்ளிக்கிழமை (நேற்று) விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், “இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் இருந்த உண்மையான தொகையைத் திருத்தி பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது” போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “2016-2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்துக்குள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளில் பல லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவில் வேலைவாய்ப்பு தொடர்பாக யார், யாரிடமிருந்து எவ்வளவு தொகை பெறப்பட்டது, அவர்களது பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன. அதற்கான அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. செந்தில் பாலாஜியிடம் விசாரணை முடிந்துவிட்டது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இதனால், எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையிலும் மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை” என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அல்லி, செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருந்தபோதும்கூட, ஜாமீன் வழங்குவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றம் எதுவும் இல்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.