அரசு தேர்வில் ஆட்சேர்ப்பு மோசடி மற்றும் வினா தாள் கசிவு வழக்குகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். தேர்வில் ஏமாற்றுவோருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்தார். “இளைஞர்களின் கனவுகள் மற்றும் ஆசைகளுடன் அரசு ஒருபோதும் சமரசம் செய்யாது.

தேர்வில் மோசடி செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என்றார். இத்துடன் அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும்” என்று அவர் கூறினார். கல்சியில் நடைபெற்ற விளையாட்டு மற்றும் கலாச்சார விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக முதல்வர் அறிவித்தார். ஆளுநரின் ஒப்புதலைத் தொடர்ந்து, அவசரச் சட்டம் தற்போது சட்டமாக மாறியுள்ளது. கடந்த வாரம், மாநிலத்தில் வேலையில்லாத நபர்களின் அமைப்பான பெரோஸ்கர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள், டேராடூனின் பிரதான ராஜ்பூர் சாலையில், ஆட்சேர்ப்பில் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.