தமிழ்நாட்டில் நாளை 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த கனமழையின்போது 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
அதேபோல், நாளை (05.04.2025) சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். வரும் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் 36 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் பதிவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.