தமிழக அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று (மார்ச் 01 2025) முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு, அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி முடித்த அனைத்து குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே, தனியார் பள்ளிகளின் சேர்க்கைக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை மார்ச் முதல் தொடங்குகிறது. கடந்த 2024-25 கல்வியாண்டில் 60,000 மாணவர்கள் கோடை விடுமுறைக்கு முன்பே அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் அதே அளவிலான மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாணவர் சேர்க்கை விவரங்கள் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.