Student complaint box: அடுத்தடுத்து பாலியல் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் மீண்டும் மாணவர் மனசு பெட்டியை மீண்டும் வைக்க அரசு பள்ளி மேலாண்மை ஆணையம் திட்டமிட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2012ம் ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் குறித்து புகாரைப் பெற மாணவர் மனசு பெட்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் பள்ளிகளில் உள்ள நிறை, குறைகள், கல்விப்பாதையில் மாணவர்களின் மனதில் உள்ள எண்ணங்கள், தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் இது ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவது, குழந்தை திருமணம் உள்ளிட்ட புகார்களை எழுதி, இதில் போடலாம். முன்பு மாதம் ஒருமுறை அல்லது சில நாட்களுக்கு ஒரு முறை என, இந்த பெட்டியை தலைமையாசிரியர்கள் திறந்து, அதிலுள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். தற்போது பல பகுதிகளிலும், பள்ளி மாணவர்கள் பாலியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாவதை தொடர்ந்து, இதற்கு முக்கியத்துவம் அளிக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் பிரச்சனைக்கு தீர்வு காண அரசு பள்ளிகளில் மாணவர் மனசு பெட்டியை மீண்டும் வகைக்க அரசுப் பள்ளி மேலாண்மை ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இருப்பினும், சில பள்ளிகளில் இந்த பெட்டிகள் வைக்கப்படுவதில்லை. அதனை ஊக்குவிக்கும் விதமாகவும், பள்ளியில் உள்ள மற்ற குறைகள் குறித்து மாணவர்கள் தெரிவிக்கும் வகையில் இது மீண்டும் செயல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.