பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நேற்று பல்கலைக்கழக வளாகத்திற்குள் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா பல்கலைக்கழக தர்பாங்கா கட்டடத்தின் அருகில் பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்தது. இதன் அதிர்வில் ஜன்னல் கண்ணாடிகளும், காரின் கண்ணாடிகளும் உடைந்து சிதறின.
இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் சங்கத் தேர்தலில் தங்களது ஆளுமையை காண்பிக்க சில மாணவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இந்நிலையில், பல்கலைக்கழக விடுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள மாணவர்கள் சிலருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மார்ச் 29ஆம் தேதி பாட்னா பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 10ஆம் தேதி தொடங்கப்படும் எனவும் தேர்தல் முடிவுகள் மார்ச் 30ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.