திருச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை விலக உள்ள நிலையில் தான் மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று மற்றும் நேற்று முன் தினமும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது. இதேபோல் திண்டுக்கல், திருச்சி, கரூர், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக மாலை நேரங்களில் நல்ல மழை பெய்தது. திண்டுக்கல்லில் தொடர்ந்து கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக திண்டுக்கல்லில் இன்று ஒருநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார். இதேபோல் கரூரிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.