டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அவ்வப்போது மாணவர்கள் மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, மேம்படுத்தப்பட்ட விதிகளை பல்கலைக்கழக ஒழுங்கு விதிமுறை குழு பிறப்பித்துள்ளது. அதில் ‘பல்கலைக்கழக மாணவர்கள் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ சேர்ந்து வளாகத்திற்குள் போராட்டம், கைகலப்பு, அடிதடி, விடுதி வளாக பொருட்களை சேதப்படுத்தல், ராகிங் போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது.
அவ்வாறு ஈடுபடும் மாணவருக்கு தலா ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், பிரச்சனையின் தீவிரத்தின்படி மாணவர் மேல் சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள பல்கலைக்கழக நிர்வாகம் தயங்காது’ என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.