மாணவர்களை குறிவைத்து ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டு வந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. மர்ம நபர் ஒருவர் மாணவர்கள் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு உங்களுக்கு கல்வி உதவி தொகை வந்துள்ளது எனவும், அதனை வாங்க ஆன்லைனில் 3000 ரூபாய் அனுப்ப வேண்டும் என கூறி மோசடி செயலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த மாணவர்கள் தங்களது பள்ளி ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது “யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம், அரசு மூலம் உதவித்தொகை வழங்கினால் உங்களது வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும். மர்ம நபர்களுக்கு பணத்தை அனுப்ப வேண்டாம்” என அறிவுரை வழங்கியுள்ளார். அந்த நபருக்கு மாணவர்களின் பெயர்கள், செல்போன் எண்கள் எப்படி கிடைத்தது என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகத்தினரும் விசாரணை நடத்தி மோசடி நடைபெறுவதை தடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.