தமிழ்நாட்டில் இன்று 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தான், இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் மாணவிகளில் 95.88% பேரும், மாணவர்களில் 91.74% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் 10ஆம் வகுப்பு மாணவர்களின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.80 ஆக உள்ளது. இந்நிலையில் தான், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அண்மையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். இனி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான், விராட் கோலி 10ஆம் பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் 83 மதிப்பெண்களும், இந்தி பாடத்தில் 75 மதிப்பெண்களும், கணித பாடத்தில் 51 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 55 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 81 மதிப்பெண்களும், இண்ட்ரோடக்டரி பாடத்தில் 74 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் விராட் கோலி படித்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மேற்கண்ட மதிப்பெண்களை அவர் பெற்றுள்ளார். 2004ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு முடித்துள்ள விராட் கோலி 600 மதிப்பெண்களுக்கு 419 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 12ஆம் வகுப்பு வரை படித்த விராட் கோலி, கல்லூரி செல்வதற்கு முன்பே ஐபிஎல் தொடரில் ஒப்பந்தத்தை கைப்பற்றினார். தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்த இவர், 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கிரிக்கெட் வீரராக இருந்து வருகிறார். இதனால், அடிப்படை கல்வி கட்டாயம் அவசியம் என்று விராட் கோலியின் மதிப்பெண்கள் உணர்த்துவதை பார்க்க முடிகிறது.