முதலமைச்சர் திறனாய்வு தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடப்பு கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வு வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தாண்டு முதல் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் தேர்ச்சி பெறும் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகளுக்கு என மொத்தம் 1000 பேருக்கு இளங்கலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
முதலமைச்சர் திறனாய்வு தேர்வு அக்டோபர் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களது ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றை டைப் செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் ஹால் டிக்கெட்டில் பெயர், தேதி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.