இன்றைய காலகட்டத்தில் நகர்ப்புறக் குழந்தைகள் ஓடிடி தளங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். அதில் பார்த்த திரைப்படங்களைப் பற்றியும் பேசுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, இணைய வசதி இல்லாத கடைக்கோடி கிராமமொன்றில் வாழும் சிறார்களுக்கு ஓடிடி குறித்தெல்லாம் தெரியாது. குழந்தைகள் பார்ப்பதற்கென்று தரமான திரைப்படங்கள் உலகெங்கும் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் தான், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை சிறார் திரைப்பட விழாவை கையிலெடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் சிறார் திரைப்பட போட்டிகள் நடைபெறவிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், பள்ளி அளவில் பிப்ரவரி 7ஆம் தேதியும், வட்டார அளவில் பிப்ரவரி 13ஆம் தேதியும், மாவட்ட அளவில் பிப்ரவரி 20ஆம் தேதியும் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.