தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் அட்டை விரைவில் வழங்கப்பட இருக்கிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், அரசு பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் அரசுப் பேருந்தில் இலவசமாக பயண செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வர அரசு இதற்கான கட்டணத்தை போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்குகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் இலவச பஸ்பாஸ் அட்டை முறையாக வழங்கப்படவில்லை. பழைய பயண அட்டைகளையே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு மாணவர்கள் பயணம் செய்வதில் எவ்வித சிரமம் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் கடந்த ஆண்டு பயன்படுத்திய அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து பயணிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதில், மாணவர்களிடம் கண்டிப்பாக நடக்கக் கூடாது எனவும் பேருந்துகளில் ஏற்றி-இறக்க வேண்டும் எனவும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 4 மாதமாக அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். இதற்கிடையே, மாணவர்களுக்கு பஸ் பாஸ் தயாரித்து வழங்கும் பணி சாலை போக்குவரத்து நிறுவனம் (ஐ.ஆர்.டி.) மூலம் நடந்து வருகிறது. இதற்கான டெண்டர் விடப்பட்டு தமிழகம் முழுவதும் பஸ் பாஸ் வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகள் மூலம் மாணவர்களின் பெயர், விவரங்களை 7 போக்குவரத்துக் கழகங்கள் சேகரித்துள்ளன.

அதன் அடிப்படையில் ஒரு வருடத்திற்கான பஸ் பாஸ் தயாரிக்கப்படும். பள்ளிகளுக்கே நேரில் சென்று மாணவர்களை புகைப்படம் எடுத்து வழங்குவதற்கு அந்நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது. பள்ளிகள், பாலிடெக்னிக், ஐடிஐ-களில் படிக்கும் 28 லட்சம் மாணவர்களுக்கு புதிய பஸ்பாஸ் அட்டை விரைவில் வழங்கப்பட இருக்கிறது. சென்னையில் மட்டும் சுமார் 41 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் அட்டை வழங்கப்பட உள்ளது.