நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றி ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தாண்டுக்கான இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே 7 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 15 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக, அங்கு ஜூன் 6ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், மணிப்பூரில் தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூன் 15ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. தேசிய தேர்வு முகமை நாட்டின் பிற பகுதிகளில் தேர்வு எழுதியவர்களுக்கான நீட் விடைக்குறிப்பை ஜூன் 4 அன்று வெளியிட்டது. மேலும், இது குறித்த ஆட்சேபனைகளை எழுப்புவதற்கான கடைசி தேதி ஜூன் 6 என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூரிலும் நீட் தேர்வு இன்று நடைபெற்று முடிந்துள்ளதால், விரைவாக மதிப்பீடு செய்யப்பட்டு ஜூன் 15ஆம் தேதி, நாடு முழுவதும் ஒரே கட்டமாக முடிவுகள் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. நீட் 2023 முடிவுகள் ஜூன் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை, நாடாளுமன்றக் குழுவுக்கு உத்தரவாதம் அளித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.