கடந்த 2018ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான உதவி எண் 14417 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு பள்ளிக் கல்வித்துறை சார்ந்த திட்டம் தொடர்பான சந்தேகங்கள், தகவல்கள் மற்றும் மனநல ஆலோசனை உள்ளிட்ட வசதிகளை பெறலாம். இந்த எண் தொடங்கப்பட்ட ஆண்டு முதல் மாணவர்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வு சற்று குறைவாகவே இருந்தது.
ஆனால், தற்போது படிப்படியாக அதிரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், பள்ளி ஆசிரியர் மாணவிகளிடையே பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக எழுந்து வரும் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து பாலியல் புகார்கள் குவிகின்றன. இதற்கிடையே, பாலியல் வழக்கில் சிக்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் பாலியல் வழக்குகளில் சிக்கிய ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணை அடிப்படையில் தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் 80 பேர், பள்ளிக்கல்வித் துறையில் 175 ஆசிரியர்கள் என மொத்தம் 255 பேர் மீது பாலியல் புகார் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நடவடிக்கை குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. நாளைய தினம் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆய்வு செய்ய இருக்கும் நிலையில், பாலியல் வழக்கில் சிக்கிய ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தான், பள்ளிகளில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல், அச்சுறுத்தல் குறித்து மாணவர்கள் 14417 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.