நீட் தேர்வு முடிவுகள் எப்படியிருந்தாலும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நீட் தேர்வு முடிவுகள் எப்படியிருந்தாலும் மாணவ, மாணவியர் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வரும் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருகிறார். மேலும், தன்னம்பிக்கை வழிகாட்டி நிகழ்ச்சிகளையும் அரசு நடத்தி வருகிறது. எனவே, மாணவர்கள் எதையும் எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ”தமிழகத்தில் பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்காக அடுத்த 4 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறைக்கு 7,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அதில், இந்த ஆண்டுக்கு 1,300 கோடி ரூபாய் கொடுக்கப்படும். 18,000 வகுப்பறைகள் கட்டுவது மட்டுமல்ல, கழிவறைகள் எங்கெங்கு தேவைப்படுகிறது. அங்கு அனைத்திலும் கழிவறைகள் கட்டப்படும். பள்ளிகளில் உள்ள பசுமைப் படை மூலமாக மரங்கள், செடிகள் வளர்க்கப்பட்டு, அதன் மூலம் பழங்கள், காய்களை சத்துணவில் பயன்படுத்தி கொள்ளலாம்.
அதேபோல் உடற்பயிற்சிகளில் பள்ளி குழந்தைகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு உண்டான கட்டணத்தையும், விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளிநாடுகளுக்குச் செல்கின்ற கட்டணத்தையும் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. எல்லோர்க்கும் எல்லாம் என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது” என்றார்.