கோவையில் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை காட்டி ஏராளமான இளைஞர்களிடம் பல லட்சம் வசூலித்து மோசடி செய்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஆண், பெண்களுடன் ஜாலியாக இருக்க சில பிரத்யேகமான செயலிகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலிகளை பயன்படுத்தி பெரும் மோசடி நடப்பதாக கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், இந்த இணையதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டது மகராஷ்டிரா நவிமும்பையை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நவிமும்பை சென்று உல்வேயை சேர்ந்த அப்சல் ரகுமான் (24). இவரது கூட்டாளிகள் கர்ணன் (24), தமிழரசன் (23), மணிகண்டன் (22), ஜெயசூர்யா பாண்டியன் (25), விக்னேஷ் வீரமணி (25), பிரேம்குமார் (33) உள்ளிட்ட 7 வாலிபர்களை கைது செய்து கோவை அழைத்து வந்து விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “இந்த கும்பலை சேர்ந்தவர்கள், விபச்சாரத்திற்கு இளம்பெண்கள், இளைஞர்கள் இருப்பதாக கூறி கவர்ச்சி படங்களை இந்த செயலி மற்றும் இணையத்தில் பதிவிடுவார்கள். இதனை பார்த்து ஆண்கள் மற்றும் பெண்கள் அதில் உள்ள செல்போன் எண்களை தொடர்பு கொண்டு தாங்கள் உல்லாசமாக இருப்பதற்கு இளம்பெண் மற்றும் இளைஞர்கள் வேண்டும் என கேட்பார்கள். அப்படி கேட்பவர்களிடம் இக்கும்பல் அவர்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு விபச்சாரத்துக்கு தயாராக இருக்கும் இளம்பெண்கள், இளைஞர்களின் கவர்ச்சி படங்களை அனுப்பி விட்டு, இதில் நீங்கள் யாருடன் ஜாலியாக இருக்க விரும்புகிறீர்களோ அவரை தேர்வு செய்து சொல்லுங்கள் என கேட்பார்கள். அந்த நபர் யாரென்று சொன்னதும் ஒரு முழு இரவுக்கு ரூ.25 ஆயிரம், ஒரு மணி நேரத்துக்கு ரூ.6 ஆயிரம் என ரேட் பேசி முடிப்பார்கள்.
பின்னர் பெண்ணுடன் ஜாலியாக இருக்க விரும்பினால் முதலில் முன்பணம் செலுத்த வேண்டும் என கூறுவார்கள். சபலத்துக்கு ஆசைப்பட்டும், இளம்பெண்ணுடன் ஜாலியாக இருக்க போகிறோம் என்ற கனவிலும் சிலர் அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பி விடுவார்கள். பணம் வந்ததும், அக்கும்பலை சேர்ந்தவர்கள் மீண்டும் தொடர்பு கொண்டு, இந்த ஓட்டலில் அந்த பெண் உள்ளார். அங்கு செல்லுங்கள் என கூறுவார்கள். இவர்களும் ஆசையோடு அங்கு செல்வார்கள். அங்கு சென்று போன் அடித்தால், பெண் பிசியாக இருக்கிறார். காத்திருக்கவும் என்பார்கள். சிறிது நேரம் கழித்து போன் செய்தால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கும்.
அதன் பின்னரே மோசடி கும்பல் தங்களிடம் நைசாக பேசி பணத்தை கறந்த விஷயம் தெரியவரும். இப்படி இந்த கும்பல் ஏராளமானோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது. இக்கும்பல் கோவை மட்டுமின்றி பல்வேறு முக்கிய நகரங்களிலும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளது. இதே போன்று, இந்த கும்பலை சேர்ந்தவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் கால்பாயாக மாறி தொடர்பு கொள்ளும் வாலிபர்களின் புகைப்படம், மற்றும் ஆவணங்களை பெற்று அதன் மூலம் வங்கிக் கணக்கு மற்றும் சிம்கார்டு வாங்கி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து 7 பேரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்று போலீசார் தெரிவித்தனர்.