தருமபுரி மாவட்டம் மல்லாபுரத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சென்ற வாரம் அரசு பொதுத் தேர்வு எழுதும் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது. பின் இத்தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து மாணவ-மாணவிகள் ஒரு வகுப்பறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஒருசில மாணவர்கள் வகுப்பறையில் இருந்த மேஜை மற்றும் நாற்காலிகளை தூக்கியெறிந்து சேதப்படுத்தினர்.
அதோடு கம்பால் மின்விசிறிகள், சுவிட்ச் போர்டு ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர். அதேபோல் மாணவிகளும் மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தினர். இதுபற்றி அறிந்த பள்ளி தலைமையாசிரியர், ரகளையில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என எழுதி வாங்கினார். இதற்கிடையே, மாணவ-மாணவிகள் ரகளையில் ஈடுபடும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட 5 மாணவ-மாணவிகளை 5 நாள் இடைநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.