இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் பயில 2023-24ஆம் ஆண்டுக்கான 25% இடங்களுக்கு இன்று (மார்ச் 20) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் இலவசமாக எல்கேஜி படிப்பதற்கான மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை குறித்து பெற்றோர்கள் அறியும் வகையில் தனியார் பள்ளிகளின் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
14 வயது வரையில் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் இலவச கல்வி பெற்று வருகிறார்கள். அவர்களுக்கான அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கிறது. அதன்படி, எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கு வரும் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.