ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் குவாலிஃபயர் 2 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது குவாலிஃபயர் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அடுத்ததாக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று குவாலிஃபயர் 2-க்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இறுதிப்போட்டியின் சென்னை அணியுடன் மோதும் அணியை தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாவது குவாலிஃபயர் போட்டி அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில், குவாலிஃபயர் 1-ல் தோல்வியுற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும், எலிமினேட்டரில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 60 பந்துகளில் 129 ரன்கள் விளாசினார். அவருடன் கைகோர்த்த சாய் சுதர்சன் 31 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார்.இதையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக, சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 61 ரன்களும், திலக் வர்மா 14 பந்துகளில் 43 ரன்களும் விளாசினர்.
அபாரமாக பந்துவீசிய குஜராத் அணியின் மோகித் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் குவாலிஃபயர் 2 போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மே 28 ஆம் தேதி, ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் மோதுகிறது.