முதலமைச்சர் முக.ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அந்த புகாரில், உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்பது முதல்வர் முக.ஸ்டாலினின் பினாமி நிறுவனம் என்றும் தன்னுடைய பினாமி நிறுவனத்திற்காக தியேட்டர்களில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு முதல்வர் அனுமதி அளித்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், “தமிழக முதல்வர் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், உள்துறை செயலாளர் ஃபனிந்த ரெட்டி ஆகிய 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். முதல்வர் தன்னுடைய பினாமி நிறுவனத்திற்காக சட்டத்தை வளைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

தனது மகன் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதற்கு வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை சிறப்பு காட்சிக்கு முதல்வர் அனுமதி வழங்கியதாக தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்பதால் விசாரணை நடத்தக்கோரி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்ததாக சவுக்கு சங்கர் தெரிவித்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் கூறினார். சட்ட விரோதமாக 950-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படங்கள் வெளியிடப்பட்டதாக தெரிவித்த அவர், புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்ததாக ஆளுநரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.