திமுக கட்சி, ஆட்சியில் பெண்களுக்கு அதிகாரம் வழங்காமல் வெற்று அறி்க்கை வெளியிடுவதா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் வரலாற்று சிறப்புமிக்க சட்ட மசோதாவை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கடந்த 9 ஆண்டுகளாக மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை ஏன் கொண்டு வரவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, “சாதி வேறுபாடுகளற்ற சமத்துவமும், பாலின சமத்துவமும் நாகரிக சமூகத்தின் அடையாளங்கள். பாலின சமத்துவம் என்பது அனைத்து வகையிலும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்குவதாகும். காலம் கடந்து செய்தாலும், கண் துடைப்புக்காக செய்தாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை திமுக சார்பில் ஆதரிக்கிறேன்” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஸ்டாலின் தலைவராக உள்ள திமுகவிலும், அவர் முதலமைச்சராக உள்ள தமிழக அரசிலும் பாலின சமத்துவமும் இருக்கிறதா என்றால், மனசாட்சி உள்ள யாரும் இல்லை என்றே சொல்வார்கள். கருணாநிதியால் அரசியலால் அடையாளப்படுத்தப்பட்ட கனிமொழி, பெண் என்பதாலேயே திமுகவில் ஓரங்கப்பட்டுள்ளனர். ஆட்சிக்கும், கட்சிக்கும் தலைமை தாங்கும் அளவுக்கு திறமை இருந்தும், அவருக்கு பத்தோடு பதினொன்றாக துணைப் பொதுச்செயலர் பதவிதான்.
அதுபோல, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மகள் இருந்தும், மகனைத்தான் அரசியலுக்கு கொண்டு வந்து திமுக இளைஞரணிச் செயலாளராக, அமைச்சாரக்கியுள்ளார். ஜனநாயகத்திற்கும், சமத்துவத்திற்கும் எதிரான வாரிசு அரசியலில்கூட, பெண்களை ஒதுக்கி விட்டு ஆண் வாரிசுக்கு மட்டுமே மகுடம் சூட்டியவர்கள்தான் இன்று பாலின சமத்துவம் பற்றி பேசுகிறார்கள். எல்லாம் வெறும் பேச்சு மட்டுமே.திமுக என்பது வாரிசு, ஊழலில் திளைக்கும் கட்சி. வாரிசு என்றாலே அங்கு ஆணாதிக்கம் வந்துவிடும். பெண்களுக்கு உரிமை மறுக்கப்படும்.
எனவே, மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்ததால், இந்திய வரலாற்றில் மகத்தான இடத்தை பிடித்ததோடு, மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ள பெண்களின் மனங்களையும் பிரதமர் மோடி வென்றுள்ளார். இதை பொறுக்க முடியாமல் வழக்கம்போல, வன்மத்தை கக்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். முடிந்தால் திமுக கட்சி, ஆட்சியில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவமும், அதிகாரமும் வழங்கட்டும். அவர் என்னதான் செய்தாலும், 2024ல் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதை தடுக்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.