தற்சமயம் இளம் தலைமுறையினர் அனைவரும் அனைத்து விஷயங்களிலும் தங்களுடைய விருப்பப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்னால் அதில் உள்ள ஆபத்தை தெரிந்து கொண்டு அதன் பிறகு செய்ய வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.
ஆனால் இந்த காலத்திலும் பிள்ளைகளின் உணர்வுக்கும், விருப்பத்திற்கும் மதிப்பளிக்காத பெற்றோர்கள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட சில பெற்றோர்கள் இருப்பதால்தான், தன்னுடைய விருப்பத்தை வெளியே சொல்ல முடியாத சூழ்நிலையில் பல குழந்தைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு பகுதியில் 14 வயதான இரண்டு சிறுமிகள் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடலூரில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிப்பு வருகிறார்கள். இருவரும் விடுதியில் தங்கி படித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் பள்ளி விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில், நேற்று மற்றொரு மாணவியும் திடீரென்று விடுதியில் விஷம் குடித்துள்ளார்.
ஆகவே அவரையும் அரசு மருத்துவமனையில் பள்ளி நிர்வாகத்தினர் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வருகிறார்கள். இது தொடர்பாக அறிந்த கடலூர் முதுநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லாமல் இரண்டு பள்ளி மாணவிகளும் அடுத்தடுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்வது தெரிய வந்தது. இந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.