ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு தாலிபன்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அப்போது முதல் அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. முன்னதாக பெண்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பள்ளி-கல்லூரிகளில் ஆண், பெண்களுக்கு என்று தனி வகுப்பறைகள், பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும், பெண்கள் இடைநிலைக் கல்வியில் சேர தடை, பெண்கள் பொது வாழ்வில் பங்கேற்க தடை, ஆண்கள் துணையோடு தான் பெண்கள் வெளியே செல்ல வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது விவாகரத்து செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான் பெண்களை கொடுமைப்படுத்திய கணவர்களிடமே திரும்பச் சென்று வாழ வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். வன்கொடுமை காரணங்களுக்காக விவாகரத்து பெற்று வெளியேறிய பெண்களை மீண்டும் அதே கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தலிபான் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக கணவரிடம் அடி வாங்கி வந்த பெண் ஒருவர், தனது 6 மகள்கள் மற்றும் 2 மகன்களுடன் கணவன் வீட்டை விட்டு தப்பித்து பெயர்களை மாற்றி வேறொரு ஊரில் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் இப்போது அதே கணவருடன் சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தப்படுகிறார்.
வன்கொடுமை செய்த கணவருடன் வலுக்கட்டாயமாக சேர்ந்து வாழ சொல்வதை எதிர்த்து சில பெண்கள் நீதிமன்றத்தை அணுகி வருகின்றனர். ஆனால், எங்களுக்கு இதுபோன்ற புகார்கள் வந்தால், நாங்கள் ஷரியாவின்படி அவற்றை விசாரிப்போம். இதுபோன்ற வழக்குகளின் அறிக்கைகளை அதிகாரிகள் பரிசீலிப்பார்கள், என்று தலிபான் உச்சநீதிமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் இனாயத்துல்லா கூறினார். தாலிபன்கள் வருகைக்கு முன்பாக விவாகரத்து வழக்குகளை விசாரிக்க பெண் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களைக் கொண்ட சிறப்பு குடும்ப நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. ஆனால், தலிபான் வந்ததும் பெண் நீதிபதிகளை மொத்தமாக நீக்கிவிட்டு ஆண்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.