தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்துக் கல்லூரிகளிலும் கேமராக்கள் பொருத்த வேண்டுமென்றும், கண்காணிப்பு நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொல்லைகளைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள் முறையாகச் செயல்படுவதை உறுதி செய்ய ஆய்வு நடத்த வேண்டும். பாலியல் தொல்லை குறித்து புகார் வந்தால், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு கல்லூரிகளிலும் காவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். பாலியல் குற்றச்சாட்டுகளை உடனடியாக காவல்துறையிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் புகார் பெட்டிகளை அமைக்க வேண்டும். கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்காணிக்க Anti drug club-களை ஏற்படுத்த வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார்.