fbpx

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் திடீர் நீக்கம்! ; மத்திய அரசு விளக்கம்

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் திடீரென நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில், பிரிட்டன்-ஸ்வீடன் நிறுவனத்தை சேர்ந்த ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசி, சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டது. இந்த தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை மக்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.

இதனிடையே ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் தடுப்பூசிகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அந்நிறுவனம் சார்பில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அந்த விளக்கத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலருக்கு டிடிஎஸ் எனும் பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட கோடிக்கணக்கான பேருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே கடந்த சில நாட்களில் கோவின் எனப்படும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை சிலர் பதிவிறக்கம் செய்ய முயன்ற போது, அதில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை. இதனால், கோவிஷீல்டு சர்ச்சையை ஒட்டி அவரது புகைப்படம் நீக்கப்பட்டு இருக்கிறதா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர். இது தொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் பலரும் தங்களது பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று வருவதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் அந்தச் சான்றிதழ்களில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இப்படி நடப்பது முதல் முறை அல்ல எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றபோதும் இதேபோன்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் பிரதமர் நரேந்திர மோடியின் படம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

மக்களே..!! குளு குளு அறிவிப்பை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்..!! எங்கெங்கு மழை பெய்யும்..?

Thu May 2 , 2024
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தமிழகத்தில் வடதமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக […]

You May Like