செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகையில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. அதாவது அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 900 பேரை குற்றவாளிகளாக சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கை நடத்துவதற்கான அனுமதி தமிழ்நாடு அரசிடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லை என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது. 2011-15ஆம் ஆண்டில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த விசாரணையை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார்.